

புதுச்சேரி: புதுச்சேரியில் கொட்டும் மழையை பயன்படுத்தி வீட்டினுள் புகுந்து வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி ரவுடி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார், அவரது கூட்டாளிகள் 3 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (22). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு நண்பர்கள் பாலாஜி (எ) பாலகிருஷ்ணன் (21), சத்தியவாசகன், பட்சி (எ) தினேஷ்குமார் உள்ளிட்ட 8 பேருடன் தனது வீட்டில் பன்னீர்செல்வம் மது குடித்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துகொண்டு இருந்தபோது மோட்டார் பைக்குகளில் திடீரென்று வந்த ஜான்டி (எ) செந்தில்நாதன் என்பவர் தலைமையிலான 7 பேர் கொண்ட கும்பல் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குள் புகுந்தது.
அவர்களை பார்த்ததும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அக்கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது சரமாரியாக வீசியது. பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது.
வெடிகுண்டுகள் வெடித்த வீட்டிலும், அந்த பகுதியிலும் புகை மண்டலமானது. இதில் பன்னீர்செல்வம், அவரது கூட்டாளிகள் பாலகிருஷ்ணன்(21), சத்தியவாசகன், தினேஷ்குமார் ஆகியோர் சிக்கிக்கொண்ட நிலையில் மற்ற 4 பேர் தப்பியோடினர்.
இதனை பயன்படுத்திய அந்த கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் பன்னீர்செல்வம், சத்தியவாசகன் உள்ளிட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து காயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பன்னீர்செல்வம், சத்தியவாசகன் ஆகியோர் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். சத்தியவாசகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் எஸ்.பி. பக்தவச்சலம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கொலை தொடர்பாக டி-நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் பன்னீர்செல்வம் தலைமையிலான கும்பலுக்கும், ஜான்டி (எ) செந்தில்நாதன் தலைமையிலான கும்பலுக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வரும் நிலையில், அவ்வப்போது இவர்களில் யார் பெரியவர் என்பதில் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் கூட இவ்விரு கும்பலும் மோதிக்கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதில் விரோதம் வலுத்த நிலையில், ஜான்டி (எ) செந்தில்நாதன் தலைமையிலான கும்பல் பன்னீர்செல்வத்தை கொலை செய்திருப்பது தெரியவந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே பன்னீர்செல்வம் கொலை செய்யப்பட்ட தகவலறிந்து ஜிப்மர் மருத்துவமனை முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த கொலை சம்பவம் சண்முகாபுரம் பகுதியிலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.