புதுச்சேரி அருகே கல்லூரி மாணவி வெட்டிக் கொலை: தப்பிய இளைஞரை கைது செய்ய போலீஸ் தீவிரம்

புதுச்சேரி அருகே கல்லூரி மாணவி வெட்டிக் கொலை: தப்பிய இளைஞரை கைது செய்ய போலீஸ் தீவிரம்
Updated on
1 min read

புதுச்சேரி: கல்லூரி சென்று வீடு திரும்பிய மாணவியை பேருந்து நிறுத்தத்தில் வைத்து வெட்டிப் படுகொலை செய்த இளைஞரை புதுச்சேரி போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அருகே உள்ள சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகள் கீர்த்தனா (17). இவர் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.

நாகராஜின் முதல் மனைவி மயிலின் தம்பி மகன் முகேஷ் (22). இவர் கீர்த்தனாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி முடிந்தது, தனியார் பேருந்தில் வந்த கீர்த்தனா சன்னியாசிக்குப்பம் பேருந்து நிலையத்தில் வந்திறங்கியுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த முகேஷ், மாணவியிடம் பேச முயன்றுள்ளார். ஆனால் அவர் பேச மறுக்கவே, ஆத்திரமடைந்த முகேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்து சரிந்த மாணவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருந்த மக்கள் திருபுவனை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவான முகேஷை தேடி வருகின்றனர். மாணவியைக் கொலை செய்துவிட்டு தப்பிய முகேஷ் மீது தனியார் மதுக்கடையில் வெடிகுண்டு வீசியது, அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in