சிறுமியின் கருமுட்டை விற்பனை: ஓசூரில் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு ‘சீல்’

ஓசூர் தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டிய மருத்துவக் குழு உறுப்பினர். உடன் மாவட்ட இணை இயக்குநர் (நலப்பணிகள்) பரமசிவன்.
ஓசூர் தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டிய மருத்துவக் குழு உறுப்பினர். உடன் மாவட்ட இணை இயக்குநர் (நலப்பணிகள்) பரமசிவன்.
Updated on
1 min read

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக நடந்த விசாரணையில் செயற்கை கருத்தரிப்பு பிரிவில் குறைகள் இருப்பது உறுதியான நிலையில், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தும், நோட்டீஸ் வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக ஓசூரில் உள்ள விஜய் மருத்துவமனையில் கடந்த ஜூன் 7-ம் தேதி சுகாதாரத் துறை இணை இயக்குநர் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட இணை இயக்குநர் (நலப்பணிகள்) பரமசிவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் விஜய் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.மேலும், மருத்துவமனை நிர்வாகியிடம் நோட்டீஸ் வழங்கினர்.

நோட்டீஸில், ‘உங்கள் நிறுவனத்தில் செயல்படும் செயற்கை கருத்தரிப்பு பிரிவில் நோயாளிகளின் சிகிச்சையின் போது நெறிமுறைகளை பின்பற்றாதது முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது.

மேலும், குறைகள் இருப்பது உறுதியான நிலையில் பொதுமக்களின் நலன் கருதி 20(3) விதிகளின்படி ஸ்கேன் பரிசோதனை நிறுவன உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் நோயாளிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யக் கூடாது.

மேலும், தங்கள் சார்பில் ஏதேனும் விளக்கம் அளிக்க விரும்பினால் இணை இயக்குநர் நலப்பணிகள் மூலமாக மாநில அலுவலருக்கு 4 வாரத்துக்குள் முறையீடு செய்யலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இணை இயக்குநர் (நலப்பணிகள்) பரமசிவன் கூறும்போது, “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு அடிப்படையில் ஓசூர் தனியார் மருத்துமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in