

புதுச்சேரி: புதுச்சேரி பூமியான்பேட்டையில் பேருந்து ஏறி பள்ளி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்து கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பாவாணர் நகர் முதலாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்கையன். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது மகன் கிர்ஷ்வாந்த் (9). மூலகுளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், இன்று பன்னீர்கையன் தனது மகனை மொபட்டில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். பூமியான்பேட்டையில் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்றபோது எதிரே ஒருவர் மோட்டார் பைக்கில் குறுக்கே வந்தார். அப்போது அவரின் மீது மோதாமல் இருக்க பன்னீர்கையன் திடீர் பிரேக் போட்டார்.
இதனால் மொபைட் நிலை தடுமாறி கவிழ்ந்தது. அப்போது, பின்னால் வேகமாக வந்த பேருந்தும், குறுக்கே வந்த நபரின் பைக்கும் பன்னீர்கையன் மொபைட் மீது இடித்தது. இதில் தந்தையும், மகனும் வலதுபுறமாக சாலையில் விழுந்தனர். இதில் அந்தப் பேருந்தின் பின்பக்க சக்கரம் சிறுவன் கிர்ஷ்வாந்த் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி மூளைச் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பன்னீர்கையன் லேசான காயங்களுடன் உயிர்பிழைத்தார்.
தனது கண்முன்னே மகன் துடிதுடித்து இறந்ததை பார்த்த தந்தை பன்னீர்கையன் கதறி அழுதார். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் பேருந்தைவிட்டு தப்பி ஓடிய நிலையில், பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். விபத்தை அறிந்த பொதுமக்கள், மாணவர்கள், பன்னீர்கையன் உறவினர்கள் அங்கு திரண்டு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.
இதனால் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது பற்றி தகவல் அறிந்ததும் வடக்கு போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, விபத்தில் இறந்து போன பள்ளிச் சிறுவனுக்கு நியாயம் கேட்டு சிறுவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென விழுப்புரம் சாலையின் குறுக்கே சிறுவன் உடலுடன் ஆம்புலன்ஸை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, ‘‘இந்திரா காந்தி சிலை முதல் அரும்பார்த்தபுரம் வரை உள்ள சாலையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். அசுர வேகத்தில் செல்லும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்'' என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையறிந்த ரெட்டியார்பாளையம் போலீஸார் மற்றும் போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அங்கிருந்து நடந்து இந்திரா காந்தி சதுக்கம் வந்தனர்.
அங்கு சதுக்கத்தை சுற்றியும் வாகனங்கள் எதுவும் செல்லாத வகையில் தடுத்து நிறுத்தினர். இதனால் நாளாபுறமும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணி வகுத்து காத்திருந்தன. சிலர் அவ்வழியாக வந்த தமிழக அரசு பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதில் ஓட்டுநரின் கையில் லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்எல்ஏ சிவகங்கரன் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் அமைச்சரிடம் வைத்தனர். அதனை கேட்ட அமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்ற மக்கள் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து மெல்ல மெல்ல சீரானது.