Published : 04 Jul 2022 08:29 AM
Last Updated : 04 Jul 2022 08:29 AM

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்து 4 தினங்களே ஆன பெண் குழந்தை கடத்தல்: 6 தனிப்படை போலீஸார் விசாரணை

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 4 தினங்களே ஆன பெண் குழந்தையை கடத்தியவர்கள் குறித்து, 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 6 தனிப்படை போலீஸார் விசாரிக்கின்றனர்.

பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ்(28). அவரது மனைவி திவ்யபாரதி (25). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 29-ம் தேதி பொள்ளாச்சியிலுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட திவ்யபாரதிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாய், சேய் இருவரும் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திவ்யபாரதியின் அருகே உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை நேற்று அதிகாலை காணவில்லை. இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் கிழக்கு காவல்நிலைய போலீஸார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை.

ஆட்டோவில் தப்பிய 2 பெண்கள்

இதைத்தொடர்ந்து, மருத்துவமனையை சுற்றியுள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, 2 பெண்கள் கையில் பையுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறி ஆட்டோவில் தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து பொள்ளாச்சி, உக்கடம், காந்திபுரம் ஆகிய பேருந்து நிலையங்களிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மருத்துவமனைக்கு சென்று, குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும், 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 6 தனிப்படை அமைத்து விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். சுகாதார துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2019-லும் கடத்தல் சம்பவம்

இதுகுறித்து குழந்தையின் உறவினர்கள் கூறியதாவது: இதே மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில், 2019-ம் ஆண்டு குழந்தை கடத்தப்பட்டபோது, சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீஸார் 10 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்தனர்.

தற்போது மகப்பேறு மருத்துவப் பிரிவில் யார் வேண்டுமானாலும் செல்லும் வகையில் பாதுகாப்பின்றி உள்ளது. பார்வையாளர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x