மதுரை விடுதியில் கல்லூரி மாணவிகள் இருவர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி: தீவிர சிசிக்சை பிரிவில் அனுமதி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மதுரை: மதுரையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த திருச்சி, நெல்லையைச் சேர்ந்த மாணவிகள் இருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் இருந்து கிடைத்த தகவல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 22 வயது கொண்ட இரு மாணவிகள். இவர்களில் ஒருவர் திருச்சியிலும், மற்றொருவர் நெல்லையிலும் படிக்கின்றனர். இவர்கள் ஏற்கெனவே இணை பிரியாத தோழிகளாக இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்ததும், வெவ்வேறு ஊர்களில் படித்தாலும், அடிக்கடி செல்போன்கள் மூலம் நட்பை பகிர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த மாணவிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விருப்பமில்லாத அவர், தனது திருமணப் பேச்சு குறித்து திருச்சியில் படிக்கும் தோழியிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், இருவரும் சேர்ந்து தற்கொலை செய்வது என முடிவெடுத்துள்ளனர். இதற்காக நேற்று மாலை மதுரைக்கு வந்தனர். தனியார் விடுதியில் அறை எடுக்க திட்டமிட்டனர். மாவட்ட நீதிமன்றம் அருகே என்றால் கல்லூரி அடையாள அட்டைகாட்டி எடுத்துவிடலாம் என நம்பினர். இதன்படி, நீதிமன்றம் எதிரிலுள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இவர்களில் ஒருவர் தனது சகோதரிக்கு மதுரையில் தங்கியிருப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இவரது சகோதரி இன்று காலை போன் செய்தபோது, நீண்ட நேரமாக எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, தங்கியிருந்த அறை கதவை திறக்க முயன்றனர். திறக்காததால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணாநகர் போலீஸார் கதவை உடைத்து பார்த்தபோது, இருவரும் மயங்கிக் கிடந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பரிசோதனையில் மருந்து சாப்பிட்டு இருவரும் தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. அவர்களது அறையில் கைப்பற்றிய கடிதம் ஒன்றில், ''இந்த உலகத்தில் ஆண்களை எங்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களுடன் குடும்ப வாழ்க்கை நடத்த முடியாது. இருவரும் சேர்ந்து வாழ முடியவில்லை. திருமணம் என்ற பெயரில் எங்களைப் பெற்றோர் பிரிக்க முயற்சிப்பதால் தற்கொலை செய்கிறோம். இருவரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்யுங்கள்'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மதுரை வந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல் ஆய்வாளர் அனுராதா விசாரிக்கிறார்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்பு கொண்டு பேசலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in