Published : 15 Jun 2022 08:00 AM
Last Updated : 15 Jun 2022 08:00 AM

கும்பகோணம் புதுமணத் தம்பதி கொலை வழக்கில் பெண்ணின் சகோதரர், உறவினர் சிறையில் அடைப்பு

திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்துவதுக்காக போலீஸாரால் அழைத்து வரப்பட்ட சக்திவேல், ரஞ்சித்.

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் துலுக்கவேலியில் காதல் திருமணம் செய்த தம்பதியை கொன்ற பெண்ணின் சகோதரர், உறவினரை கைது செய்த போலீஸார், இருவரையும் நேற்று திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம், துலுக்கவேலி அய்யாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் மகள் சரண்யா(24), இவர், நர்சிங் படித்து விட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மோகன்(31).

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர், சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு வந்து சென்றதில் மோகன்-சரண்யா இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால், சரண்யாவுக்கும், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித்துக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும் என முடிவு செய்த சரண்யாவின் குடும்பத்தினர், இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே, சரண்யாவும், மோகனும் 6 நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். இதுகுறித்த தகவலை சரண்யா தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, தங்கள் வீட்டில் மணமக்களுக்கு விருந்து வைக்க வேண்டும் எனக் கூறி, சரண்யா, மோகன் ஆகிய இருவரையும் சரண்யாவின் அண்ணன் சக்திவேல் அழைத்துள்ளார்.

இதை, நம்பி இருவரும் நேற்று முன்தினம் மாலை துலுக்கவேலியில் உள்ள சரண்யாவின் வீட்டுக்கு வந்தனர். அப்போது, சக்திவேல், ரஞ்சித் ஆகியோர் வீட்டு வாசலிலேயே, சரண்யா, மோகனை அரிவாளால் வெட்டினர். இதில், இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த சோழபுரம் போலீஸார், சடலங்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, சக்திவேல், ரஞ்சித் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்

பின்னர், சக்திவேல், ரஞ்சித் இருவரையும் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சிவபழனி, இருவரையும் ஜூன் 28-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரையும் போலீஸார் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே மோகன்-சரண்யாவின் உடல்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட பின்னர், நேற்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன்காரணமாக அரசு மருத்துவமனை முன் ஏராளமான போலீஸார் பாதுகாப்புகாக குவிக்கப்பட்டிருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியை கொலை செய்ததைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு கட்சியிகள் சார்பில் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னைபாண்டியன் தலைமை வகித்தார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளர் ச.விவேகானந்தன், நீலப்புலிகள் கட்சித் தலைவர் அ.இளங்கோவன், இந்திய மாணவர் சங்க மாநில துணைத் தலைவர் கோ.அரவிந்தசாமி, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கு.நிம்மதி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதில், கொலையான மோகன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆணவக்கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x