

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியரின் படத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் குறித்து சைபர் கிரைமில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை ஆட்சியர் கவிதாராமுவின் படத்துடன் கூடிய அறிமுகம் இல்லாத ஒரு செல்போன் எண்ணில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களிடம் தனியார் ஆன்லைன் நிறுவனத்தின் பரிசுக்கூப்பனை விலைக்கு வாங்கித் தருமாறுகூறி தகவல்களை அனுப்பி மோசடிசெய்ய முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆட்சியரும் 2 நாட்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்று யாரேனும் தகவல் அனுப்பினால் நம்ப வேண்டாம் என்றும் அதில் தெரிவித்து இருந்தார்.
ஆட்சியரின் படத்தையே பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்தது.
இந்நிலையில், இந்த மோசடி முயற்சி குறித்து புதுக்கோட்டை வட்டாட்சியர் செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில், புதுக்கோட்டை சைபர் கிரைம் பிரிவில் நேற்று முன்தினம் இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட முயன்றவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், புதுக்கோட்டை அரசு இணையதளத்தில் இருந்து ஆட்சியரின் படத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.