

புதுச்சேரி: புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் ரவுடி தலை சிதைத்து படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார் (எ) பொடிமாஸ்(27). ரவடியான இவர் மீது வெடிகுண்டு வீச்சு, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கு திருமணமாகி மங்கையர்கரசி என்ற மனைவியும், 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளனர். இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு சரத்குமார், அரியாங்குப்பம் தெற்கு போலீஸ் எஸ்.பி. அலுவலகம், காவல் நிலையத்தின் எதிரில் 100 மீட்டர் தொலைவில் உள்ள அரவிந்தர் நகரில் தனது சசோதரி வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு சகோதரி இல்லாத நிலையில், சரத்குமார், அவரது மாமா வெங்கடேசன் மட்டுமே தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் இன்று (மே. 26) அதிகாலை அவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், 6 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசன் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளனர்.
வெங்கடேசன் கதவை திறந்தபோது அவரை 2 பேர் வாயை பொத்தி, இழுத்துச்சென்று கழிவறையில் போட்டு அடைத்துள்ளனர். மற்ற 4 பேர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரத்குமாரின் கழுத்து, தலை என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினர். இதில் சரத்குமார் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சீனியர் எஸ்.பி. தீபிகா, எஸ்.பி. ரவிக்குமார், அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சரத்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழங்குப் பதிவு செய்த அரியாங்குப்பம் போலீஸார், எதிரிகளுடனான முன்விரோதம் காரணமாக சரத்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்: அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக கொலை, திருட்டு, கஞ்சா, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக வீராம்பட்டினத்தில் தந்தையே மகனை குத்தி கொலை செய்தது, அதே பகுதியில் வெடிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் 27 பவுன் திருட்டு, அடிதடி, தற்போது ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலைய அதிகாரிகள் சரிவர ரோந்து செல்லாதது, முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபடாததே குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, குற்றங்களை தடுக்க போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் வலியறுத்தியுள்ளனர்.