

கடலூர்: சேலத்தில் இருந்து டைல்ஸ் ஏற்றிக் கொண்டு சிதம்பரம்- சீர்காழி புறவழிச்சாலையில் நேற்று அதிகாலை, மினி லாரி ஒன்று வந்தது. கூத்தன்கோயில் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜல்லி லாரி மீது அந்த மினி லாரி மோதி, முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் சேலத்தைச் சேர்ந்த மினிலாரி ஓட்டுநர் நகுலேஸ்வரன்(25), மினி லாரியின் முன்னால் உட்காந்திருந்த சேலம் தம்மம்பட்டியை சேர்ந்த டைல்ஸ் விற்பனையக உரிமையாளர் செல்வக்குமார்(38), செல்வகுமாரின் மைத்துனியும் சீர்காழி வட்டம் மாதானம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகளுமான கற்பகவள்ளி(27), செல்வக்குமாரின் 3 வயது குழந்தை மிதுன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும், மினி லாரியின் பின் பகுதியில் இருந்த சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார்(34), கருப்பசாமி(45), பெருமாள் (53) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அண்ணாமலை நகர போலீஸார் 4 உடல்களையும் கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 3 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மினி லாரி ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் இந்த விபத்து நடத்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.