கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? - ராமேசுவரத்தில் மீனவப் பெண் எரித்து கொலை: இறால் பண்ணை மீது தாக்குதல் - 6 வடமாநில இளைஞர்கள் கைது

ராமேசுவரத்தில் குவிக்கப்பட்ட அதிரடிப்படையினர். படங்கள்: எல்.பாலச்சந்தர்
ராமேசுவரத்தில் குவிக்கப்பட்ட அதிரடிப்படையினர். படங்கள்: எல்.பாலச்சந்தர்
Updated on
2 min read

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மீனவப் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த இறால் பண்ணை அடித்து நொறுக்கப்பட்டது. 6 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராமேசுவரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண், கடலோரப் பகுதியில் கடல்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கணவன், 3 மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை கடல்பாசி சேகரிக்கச் சென்ற அப்பெண், மாலை வரை வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல இடங்களிலும் தேடினர். அப்பெண்ணின் கணவர் ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்நிலையில் காட்டுப் பகுதியில் உடையில்லாமல் முகம் எரிந்தநிலையில் அப்பெண் இறந்து கிடந்தது அன்று இரவு கண்டறியப்பட்டது. கிராம மீனவப் பெண்களிடம் போலீஸார் விசாரித்தபோது, கடந்த 23-ம் தேதி அப்பகுதியில் உள்ள இறால் பண்ணையில் பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் அப்பெண்ணை கேலி செய்ததாகவும், அதை எதிர்த்து அவர் சண்டையிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதை அறிந்த அப்பெண்ணின் உறவினர்களும், கிராம மக்களும் நேற்று முன்தினம் நள்ளிரவில் இறால் பண்ணையை அடித்து நொறுக்கி அங்குள்ள ஒரு கட்டிடத்தை தீ வைத்து கொளுத்தினர். அங்கிருந்த 6 வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர். கிராம மக்களிடமிருந்து வடமாநில இளைஞர்களை மீட்ட போலீஸார், அவர்களை பாதுகாப்பாக அறையில் வைத்து பூட்டினர்.

இறந்த பெண்ணின் உடலைபோலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். அதை தடுத்துநிறுத்தி கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சு நடத்திய ராமநாதபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கார்த்திக், கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தார். காயமடைந்த 6 வடமாநில இளைஞர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்‌.

மீனவர்களால் சேதப்படுத்தப்பட்ட இறால் பண்ணை.
மீனவர்களால் சேதப்படுத்தப்பட்ட இறால் பண்ணை.

இந்நிலையில் நேற்று காலை 8.15 மணியளவில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் - மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது இறந்த பெண்ணின் 2-வது பெண் தீக்குளிக்க முயற்சித்தார். அவரை தடுத்த போலீஸார், ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், ராமேசுவரம் நகராட்சித் தலைவர் நாசர்கான் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், அப்பெண்ணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்தனர்.

அதன் பின்னரும் கலைய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் டயர்களை எரித்தனர். அவர்களை அதிரடிப்படை போலீஸார் கலைந்து போகச் செய்தனர்.

இப்போராட்டத்தால் சுமார் 5.30 மணி நேரம் கழித்து மதியம்1.45 மணியளவில் ராமேசுவரத்தில்இருந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் வாகனங்கள் இயக்கப்பட்டன.

இவ்வழக்கு தொடர்பாக போலீஸார் கூறும்போது, சந்தேகத்தின் அடிப்படையில் இறால் பண்ணையில் வேலை செய்த 6 வடமாநிலஇளைஞர்களை கைது செய்துஉள்ளோம். அப்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் எரித்துக் கொல்லப்பட்டாரா? என்பது பிரேதப் பரிசோதனை முடிவில் தெரிய வரும் என்று கூறினர்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட பகுதியில் இயங்கி வந்த இறால் பண்ணை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாகக் கூறி, அதற்கு மீன்வளத் துறையினர் சீல் வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in