

ஈரோடு: ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள டானாபுதூர் சோதனைச் சாவடியில், நேற்று முன்தினம் இரவு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரைச் சோதனையிட்டதில், 7 தலை நாகத்தின் மேல் பொன் நிறத்தில் நிற்கும் ஐம்பொன் விநாயகர் சிலை மற்றும் உலோகத்தாலான கிருஷ்ணர் சிலை இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, காரில் வந்த 5 பேரையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் கண்ணனூரைச் சேர்ந்த சசிராம் (60), காசர்கோடு பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் (32), முகமது (30), ரஷீத் (41), ஜாகீர் (23) என்று தெரியவந்தது. இந்த சிலைகளை விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த சாந்தா என்ற பெண்ணிடம் வாங்கியதாகவும், கலை நயமிக்க இந்த சிலைகளை மெருகேற்றி, அதிக விலைக்கு விற்பதற்காக மைசூருக்கு கடத்தி சென்றதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஐவரையும் கைது செய்த போலீஸார், 2 சுவாமிசிலைகளையும் பறிமுதல் செய்தனர்.
கைதான 5 பேருக்கும், சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், சிலையின் தொன்மை குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.