

சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு நேற்று விமானத்தில் வந்த பயணிகளைஅதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, ஓர் இளைஞர் கொண்டுவந்த அட்டைப்பெட்டியில் வெள்ளை நிற முள்ளம்பன்றி மற்றும் டாமரின் குரங்குக் குட்டி இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவை இரண்டையும் வளர்ப்பதற்காக, வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்ததாக அந்த இளைஞர் தெரிவித்தார். ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாததால், முள்ளம்பன்றி, டாமரின் குரங்கை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், இது தொடர்பாக அந்த இளைஞரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய வன விலங்கு பாதுகாப்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முள்ளம்பன்றி, டாமரின் குரங்கை தாய்லாந்துக்கே திருப்பி அனுப்பவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.