மதுரை | 2-வது திருமணம் செய்து கொண்டதோடு முதல் மனைவி இறந்ததாக போஸ்டர் ஒட்டிய கணவர்: சமயநல்லூர் மகளிர் போலீஸார் விசாரணை

மதுரை | 2-வது திருமணம் செய்து கொண்டதோடு முதல் மனைவி இறந்ததாக போஸ்டர் ஒட்டிய கணவர்: சமயநல்லூர் மகளிர் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

மதுரை: முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகக் கூறி, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதுடன், வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவரை சமயநல்லூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், கண்டாங்கி பட்டியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் பாலகிருஷ்ணன். இவருக்கும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகிலுள்ள அழகாபுரியைச் சேர்ந்த சேகர் மகள் மோனிகாவுக்கும் (22) திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பாலகிருஷ்ணனுக்கு குடி பழக்கம் இருந்ததால், அவருக்கும் மோனிகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்தில் மோனிகா புகார் தெரிவித்தார். அப்போது பாலகிருஷ்ணனை விசாரித்து அறிவுரை கூறிய போலீஸார், இருவரையும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

பின்னர் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையுடன் மோனிகா அழகாபுரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். அதன் பின்பும் மனைவியுடன் மொபைல் போனில் பேசி பாலகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் தனது முதல் மனைவி மோனிகா இறந்துவிட்டதாகக் கூறி அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும், அதோடு தான் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தொடர்பான போட்டோ இடம்பெற்ற போஸ்டரை யும் கண்டாங்கிபட்டி, சிவகங்கை பகுதியில் ஒட்டியிருக்கிறார். இவற்றை தனது முகநூலிலும் பதிவிட்டுள்ளார்.

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மோனிகா, சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா தேவியிடமும் புகார் தெரிவித்துள்ளார். அதில், முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக விசாரிக்க சமயநல்லூர் மகளிர் காவல் நிலைய போலீஸார், பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in