

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றத்தில் வீட்டில் தனியாக இருந்த மாமியாரை, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களின் உதவியோடு கொலை செய்த மருமகளை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் மேட்டுத் தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பத்தேசந்த்(77). அவரது மனைவி பிரேங்கவர்(72) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
பத்தேசந்த், சின்னகடை வீதியில் நகை அடகுக் கடைநடத்தி வருகின்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரேங்கவர் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
மேலும், இளைய மருமகள் சுஜாதா வீட்டின் பின்னால் உள்ள முட்புதரில் லேசான காயங்களுடன் விழுந்து கிடந்தார்.திருக்கழுக்குன்றம் போலீஸார் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைய மருமகள் சுஜாதாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது: கணவர் பிந்து குமாருக்கு சரியான வருமானம் இல்லாததால் தனது மாமியாரிடம் சுஜாதா ரூ.20 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால், மாமியார் தர மறுத்ததாகத் தெரிகிறது.
இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தனது உறவினர் ஒருவரின் 16 வயது மகன்களுடன் பிரேங்கவரை கொலை செய்துள்ளார். தப்பிச்செல்லும்போது சுஜாதா முட்புதரில் விழுந்துவிட்டார், சிறுவர்கள் தப்பிவிட்டனர்.
இதையடுத்து, தப்பிச் சென்ற சிறுவர்கள் இருவரையும் டிஎஸ்பி ஜகதீஸ்வரன் தலைமையில், திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர்ரவி உள்ளிட்ட தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர், திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொலை சம்பவம் குறித்து விரைவாக விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்களை விரைவாகக் கைது செய்த தனிப்படை போலீஸாரை மாவட்ட எஸ்பி சுகுணாசிங் பாராட்டினார்.