

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம், ஆதியூர்பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (43). பெங்களூரில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி துர்காதேவி (34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், பெருமாள் வரும் ஞாயிற்றுக்கிழமை (17-ம் தேதி) கோயிலுக்கு சென்று அங்கு கிடா வெட்டி குடும்பத்தாருடன் வழிபாடு நடத்த ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது மாமியார் வீட்டாரை அழைக்க திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பத்துக்கு நேற்று காலை பெருமாள் மற்றும் அவரது மனைவி துர்காதேவி ஆகிய 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.
அங்கு சென்றபோது துர்காதேவிக்கும், பெருமாளுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பெருமாள் வீட்டில் இருந்து இரும்பு கம்பியைஎடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இதில், துர்காதேவி பலத்த காய மடைந்தார். உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு துர்கா தேவி அழைத்துச்சென்ற போது அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் துர்காதேவியின் தாயார் விஜயலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.