

ஈரோடு: கோபி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர், பாலியல் தொல்லை கொடுத்ததாக, தற்காலிக பெண் பணியாளர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோபி அரசு மருத்துவமனையில் தற்காலிகப் பணியாளராக பணிபுரிந்து வரும் பெண் பணியாளர், கோபி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸாரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறேன். கோபி அரசு மருத்துவமனையில், தற்காலிக தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிந்து வருகிறேன்.
இங்கு தலைமை மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வரும் ஆனந்தன், கடந்த மாதம் 21-ம் தேதியன்று, வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடச் சென்ற போது, என்னை பணி நிரந்தரம் செய்வதாகக் கூறி எனக்கு பாலியல் தொந்தரவு அளித்தார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானேன். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.