Published : 23 Mar 2022 07:03 AM
Last Updated : 23 Mar 2022 07:03 AM
வேலூர்: ஆட்டோவில் பயணித்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் 4 பேரை காவல் துறை யினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் கடந்த 16-ம் தேதி நள்ளிரவு தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர், தனது ஆண் நண்பருடன் திரைப்படம் பார்த்து விட்டு ஷேர் ஆட்டோவில் வேலூருக்கு பயணித்துள்ளார். அந்த ஆட்டோவில் இருந்த 4 பேரும் பயணிகள் என அதன் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வழியாக வேலூருக்குச் செல்லாமல் சத்து வாச்சாரி நோக்கி திரும்பியுள்ளது.
இதைப் பார்த்த அவர்கள் இருவரும் கேட்டபோது திடீரென ஆட்டோவில் இருந்தவர்கள் இருவரையும் கத்தி முனையில் மிரட்டி பாலாற்றங்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் இருந்து ஏடிஎம் கார்டை பறித்துச் சென்று ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். மேலும், இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்ப வம் குறித்த தகவல் மிகவும் தாமதமாக வெளியே தெரிந்ததால் காவல் துறையினர் அதிர்ச்சியடைந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய இளம்பெண், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு இ-மெயில் மூலம் நடந்த விவரங்களை நேற்று புகாராக அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப் படுத்தியதுடன் இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இதில், இரண்டு பேர் 18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், இரவு நேரத்தில் ஆட்டோவில் பெண்கள் பாது காப்புடன் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் இரவு நேர ஆட்டோக்களுக்கு கட்டுப் பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக் கப்படும் என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை பெற்றுத்தரப்படும் என டிஐஜி ஆனி விஜயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உறுதியளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT