மறைந்த முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 60 பவுன் திருட்டு: ஓட்டுநரிடம் புதுச்சேரி போலீஸ் விசாரணை  

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுச்சேரி: மறைந்த முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 60 பவுன் திருடப்பட்டது குறித்து புதுச்சேரியில் கார் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்தவர் பார்வதி காந்தராஜ் (75). தனியார் பள்ளி தாளாளராக உள்ளார். இவரது கணவர் முன்னாள் எம்எல்ஏ தனகாந்தராஜ். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது 5 பிள்ளைகளுக்கும் திருமணமாகி அவர்கள் புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளில் தனித்தனியாக வசித்து வரும் நிலையில், பார்வதி காந்தராஜ் தனியாக இருந்து வருகிறார்.

இதனிடையே, கடந்த கடந்த 2018-ம் ஆண்டு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக ஜீவானந்தம் வீதியிலுள்ள வீடு மற்றும் ஏனாம் வெங்கடாசலபிள்ளை வீதியிலுள்ள மற்றொரு வீடு என இரு வீடுகளையும் புதுச்சேரி வினோபா நகரைச் சேர்ந்த தனது ஓட்டுநரான எட்வர்டு (40) என்பவரிடம் பராமரிப்பு பணிக்காக ஒப்படைத்துள்ளாதாக தெரிகிறது. அப்போது, ஏனாம் வெங்கடாசலபிள்ளை வீதியிலுள்ள வீட்டில் பார்வதி காந்தராஜ் தனது நகைகளை பராமரிக்க இரும்பு பெட்டியில் (டிரங்க் பெட்டி) வைத்திருந்துள்ளார். இதனை அறிந்த எட்வர்டு அந்த இரும்பு பெட்டியின் அசல் சாவியை எடுத்து கள்ளச்சாவியை தயாரித்து, அதிலிருந்த 60 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே 2019-ல் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பார்வதி காந்தராஜ் சமீபத்தில் இரும்பு பெட்டியில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்துள்ளார். அப்போது அதில இருந்த ஆரம், நெக்லஸ், கம்மல், தங்க வளையல் உள்ளிட்ட சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 60 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக தனது வீட்டுக்கு வந்து சென்று உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் விசாரித்தபின் ஓட்டுநரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பார்வதி காந்தராஜ், இது குறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையிலான போலீஸார் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஓட்டுநராக பணியாற்றிய எட்வர்டு மீது வழக்குப் பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in