புதுச்சேரியில் பணத்திற்காக கூரியர் நிறுவன ஊழியர் கொலை: இளைஞர் கைது; மற்றொருவருக்கு வலை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் பணத்திற்காக தனியார் கூரியர் நிறுவன ஊழியரை கொலை செய்த வழக்கில் ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் அருகே அரும்பார்த்தபுரம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன் (எ) மூர்த்தி (31). தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், நேற்று காலை வில்லியனூர்-பத்துக்கண்ணு சாலை சேந்தநத்தம் சுடுகாட்டில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்,

இது குறித்து தகவலறிந்து வந்த வில்லியனூர் போலீஸார் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சேந்தநத்தம் பகுதியைச் சேர்ந்த புகழரசன் (22), அவரது நண்பர் சஞ்சீவி (22) ஆகியோர் சீனுவாசனை பணத்துக்காக கொலை செய்தது தெரிந்தது.

இதையடுத்து சங்கராபரணி ஆற்றங்கரையில் பதுங்கியிருந்த சஞ்சீவியை போலீஸார் இன்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 20-ம் தேதி நள்ளிரவு கூடப்பாக்கம்-பத்துக்கண்ணு பிரதான சாலையில் உள்ள மது கடைக்குச் மது குடிக்கச் சென்றபோது அங்கு போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த சீனிவாசனை தனியாக அழைத்துச் சென்று பணத்தை பறிக்க முயன்று கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து சஞ்சீவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, முக்கிய கொலையாளியான புகழசரன் வில்லியனூர் சங்கராபரணி ஆற்றின் நடுவில் உள்ள முட்புதரில் பதுங்கியிருப்பதாக வில்லியனூர் போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து ட்ரோன் கேமரா உதவியுடன் வில்லியனூர் போலீஸார் சங்கராபரணி ஆற்று பக்தியில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in