

சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று (அக்.4) தீர்ப்பு அளித்தது.
கறம்பக்குடி காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் கணேசன். இவர் தற்போது ரெகுநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த 2019 அக்.5-ம் தேதி இரவு கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் போலீஸாருடன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த கறம்பக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த பி.அய்யப்பனை நிறுத்தி விசாரித்தார்.
அப்போது, அய்யப்பன் கணேசனைத் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, தாக்கியுள்ளார். மேலும், மதுபாட்டிலை எடுத்துக் குத்துவதற்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கறம்பக்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் இன்று (அக்.4) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட அய்யப்பனுக்கு, கொலை முயற்சிப் பிரிவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், பணி செய்யவிடாமல் தடுத்ததற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி ஏ.அப்துல் காதர் உத்தரவிட்டார்.