

புதுச்சேரி லாஸ்பேட்டையில் தேவகி நகரில் வசிப்பவர் கிஷோர்குமார்(34). எண்ணெய் வியாபாரி. கடந்த 21-ம் தேதி வீட்டில் குடும்பத்தினருடன் படுத்திருந்தார். அப்போது நள்ளிரவு மதில் சுவர்மீது ஏறி வீட்டினுள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் ஜன்னல் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
சத்தம் கேட்டு எழுந்த கிஷோர்குமார், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றபோது, உஷாரான மர்ம நபர் அருகிலிருந்த முட்புதருக்குள் பதுங்கினார். இதனால் சுதாரித்த கிஷோர்குமார் லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். விரைந்துவந்த போலீஸார் மர்ம நபரை பிடித்து சோதனையிட்டனர்.
அப்போது கதவு, ஜன்னல்களை உடைக்க பயன்படுத்தும் இரும்புராடு மற்றும் ஸ்குருடிரைவர், கத்தி உள்ளிட்டவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் வேலூர், ஆம்பூர் கே.எம். நகரைச் சேர்ந்த அப்துல் ஹமீது மகன் இஸ்மாயில்(45) என்பதும், இவர் மீது வேலூர் காவல் நிலையத்தில் 15 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதனிடையே இஸ்மாயில் புதுச்சேரியிலும் பல இடங்களில் திருடியிருப்பது தெரியவந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் அவரை லாஸ்பேட்டை போலீஸார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது லாஸ்பேட்டை பகுதிகளில் 5 வீடுகளிலும், கோரிமேட்டில் ஒரு வீட்டிலும் இஸ்மாயில் திருடியது உறுதியானது.
இதையடுத்து இஸ்மாயிலை வேலூர் அழைத்துச் சென்ற காவல்துறை ஆம்பூரல் பதுக்கி வைத்திருந்த 42 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.17 லட்சமாகும். இதன்பின்னர் மீண்டும் இஸ்மாயில் இன்று(செப். 30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவரது கூட்டாளியான ஆற்காடு பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.