கரூர் மாரியம்மன் கோயிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

கரூர் மாரியம்மன் கோயில்.
கரூர் மாரியம்மன் கோயில்.
Updated on
1 min read

ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையையொட்டி கரூர் மாரியம்மன் கோயிலில் வழிபட்ட பெண்ணிடம் 5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பியோடினார். சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்வையிட்டு கரூர் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் பெண்கள் அதிக அளவில் வழிபடக் குவிந்தனர். கரூர் மாரியம்மன் கோயிலில் இன்று (ஜூலை 30) காலை முதலே பெண்கள் அதிக அளவில் குவிந்தனர். கூட்டம் காரணமாக வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

கரூர் பசுபதிபாளையம் அருணாசலம் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் மகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் அம்மனை தரிசனம் செய்துவிட்டுக் கோயிலுக்கு வெளியே வந்து சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் தனலட்சுமியின் 5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்துத் தகவலறிந்த கரூர் நகர போலீஸார் தனலட்சுமியிடம் விசாரணை நடத்தியதுடன் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் அதிக அளவில் பெண்கள் வழிபாடு செய்யும் நிலையில், மாரியம்மன் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படாததே இச்சம்பவத்துக்குக் காரணம் என பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

இதன் பிறகு, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதுடன் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி இரண்டிரண்டு பேராக தரிசனத்துக்கு அனுமதித்தனர். கோயிலில் பட்டப்பகலில் பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in