

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர், ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளம் அருகே உள்ள சண்முகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகன் யுவன் (4). அதே பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவரது மகள் சண்முகப்பிரியா (5). கண்ணன் என்பவரது மகன் இஷாந்த் (5). இவர்கள் 3 பேரும் உறவினர்கள். நேற்று மாலையில் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் அருகில் உள்ள குளத்துக்கு சென்று நீரில் இறங்கி விளையாடியுள்ளனர்.
அப்போது திடீரென்று மூன்று பேரும் நீரில் மூழ்கினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று மூன்று குழந்தைகளையும் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் பரிதாபமாக இறந்து விட்டனர்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தில் 3 குழந்தைகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.