

மதுரை விமான நிலையத்தில் சென்னை மாகநராட்சி பொறியாளர் ஒருவரிடம் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் கண்காணிப்புப் பிரிவில் பொறியாளராக பணிபுரிபவர் சக்தி மணிகண்டன் (56). சென்னை பெரியார் நகரில் வசிக்கிறார். திண்டுக்கல்லை சொந்த ஊராக கொண்ட அவர், சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், இன்று (ஜூன் 20) ஏர்-இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு செல்வதற்காக அவரது குடும்பத்தினர் 3 பேருடன் மதுரை விமான நிலையத்திற்கு சென்றார்.
அப்போது, விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பாக பாதுகாப்பு அறை பகுதியில் அவரது பேக் உள்ளிட்ட உடைமைகள் ஸ்கேன் செய்து பரிசோதிக்கப்பட்டன. அவரது பேக் ஒன்றில் இரட்டை குழல் துப்பாக்கியில் பயன்படுத்தும் 4 தோட்டாக்கள் இருப்பது தெரிந்தது.
இது குறித்து, அவரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி சரவணன் விசாரித்த போது, முறையாக உரிமம் பெற்ற இரட்டை குழல் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அதில் பயன்படுத்தும் இந்த தோட்டாக்களை தெரியாமல் பேக்கில் வைத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், இது குறித்து, பெருங்குடி காவல் நிலையத்திற்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். போலீஸார் அவரிடமிருந்து, 4 தோட்டாக்களை கைப்பற்றி, அவரிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அவரது சென்னை பயணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அவரது குடும்பத்தினர் மூவர் திட்டமிட்டபடி, அதே விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.