கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்ற மதுரை தனியார் மருத்துவமனை ஊழியர் கைது: கரோனாவால் உயிரிழந்தவர்களின் சான்றிதழ் மூலம் கைவரிசை 

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்ற மதுரை தனியார் மருத்துவமனை ஊழியர் கைது: கரோனாவால் உயிரிழந்தவர்களின் சான்றிதழ் மூலம் கைவரிசை 
Updated on
1 min read

மதுரையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் மருந்துகளை விற்றதாக தனியார் மருத்துவமனை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தொற்றால் இறந்தவர்களின் சான்றிதழ்களைப் பயன்படுத்தி வாங்கி விற்றாரா என, போலீஸ் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

கரோனா தொற்று பாதித்து, அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து செலுத்தினால் ஓரளவுக்கு உயிரை காப்பாற்ற முடியும் சுகாதாரத்துறை நம்புகிறது.

இதற்கான ஊசி மருந்து பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் சான்றிதழ் மூலம் குறைந்த விலைக்கு இம்மருந்து விற்கப்படுகிறது. இதற்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்குகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து மதுரையில் பல்வேறு இடங்களிலுள்ள தனியார் மருத்துவமனைப் பகுதிகளைப் போலீஸார் தீவிரமாகக் கண்காணித்தனர். இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மதுரை புது விளாங்குடியைச் சேர்ந்த இர்பான் கான் என்ற இளைஞரை செல்லூர் போலீஸார் நேற்று பிடித்தனர்.

விசாரணையில், அவர் செல்லூர்ப் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிபவர் எனத் தெரியவந்தது. அவர், ஏற்கெனவே தனியார் மருத்துவமனை மூலம் ரெம்டெசிவர் மருந்துக்களை வாங்கி இருப்பு வைத்து, தற்போது, ஓரிருவருக்கு கூடுதல் விலைக்கு விற்றதும் தெரிந்தது.

மார்க்கெட் விலையைவிட, கூடுதல் விலைக்கு ரெம்டெசிவர் விற்றது தவறு என்ற வகையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர். மேலும், அவருடன் யாரும் தொடர்பில் இருந்தார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.

இது குறித்து போலீஸார் கூறியது: மதுரையில் தனியார் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்துகளை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பதாகவே முதலில் எங்களுக்கு தகவல் வந்தது.

சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து விசாரிக்கும்போது, அப்படி எதுவும் நடக்கவில்லை போன்று தெரிகிறது. தனியார் மருத்துவமனை ஊழியர் என்ற முறையில், இர்பான்கான் ஆரம்பத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் இம்மருந்து எளிதாக கிடைத்தபோது, வாங்கி வைத்துகொண்டு தற்போது அந்த மருத்துக்கு தேவை அதிகரித்துள்ளதால் கூடுதல் விலைக்கு விற்றிருப்பதும் விசாரணையில் தெரிந்தது.

இதுவே குற்றம் என்பதால் அவரைக் கைது செய்துள்ளோம். மேலும், இது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இர்பான் கான் எப்படி ரெம்டெசிவர் வாங்கினார். வேறு நெட்வொர்க் மதுரையில் செயல்படுகிறதா எனும் கோணத்திலும் விசாரிக்கிறோம்,’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in