தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இரவு நேரப் பணியில் இருந்த மருத்துவரை, சிகிச்சைக்கு வந்த இளைஞர்கள் போதையில் தாக்கியது தொடர்பாக, கைது செய்யப்பட்ட நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மேலவண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ராகவன் (27). ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடிக்காட்டைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (18). இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும், கடந்த ஏப். 9-ம் தேதி இரவு, ஒரத்தநாடு சென்றுவிட்டு, தஞ்சாவூருக்கு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் வந்தபோது இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில், ராகவன், மாதேஸ்வரன் இருவரும் காயமடைந்தனர். அவர்களைச் சக நண்பர்களான வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த எம்.ராகவன் (26), சைதம்பாள்புரம் ஆர்.ராமச்சந்திரன் (22) சேர்ந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக, விபத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் அருண்பாண்டியன், காயமடைந்தவர்களிடம் விபத்து எப்படி நடந்தது, உடலில் எங்கு வலி உள்ளது எனக் கேட்டுள்ளார்.

அப்போது, மாதேஸ்வரன், ஆர்.ராகவன், எம்.ராகவன், ராமச்சந்திரன் ஆகியோர், அருண்பாண்டியனிடம் தகராறு செய்து, அவரைத் தாக்க முயன்றனர். இது தொடர்பாக மருத்துவர் அளித்த புகாரின் பேரில், மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அளித்த பரிந்துரையின்படி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் உத்தரவின்படி, இன்று (மே 04) நான்கு பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in