சொத்து வரி விதிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம்: மதுரை மாநகராட்சி உதவியாளர் கைது  

சொத்து வரி விதிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம்: மதுரை மாநகராட்சி உதவியாளர் கைது  
Updated on
1 min read

மதுரையில் சொத்துவரி போடுவதற்கு ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாநகராட்சி 3வது மண்டலத்தில் வரி வசூல் பிரிவில் இளநிலை உதவியாளராக முத்துக்கனீஸ்வரன்(37) என்பவர் பணி புரிந்தார்.

மதுரை செம்பூரணி பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் சமீபத்தில் முத்துக்கனீஸ்வரனை அணுகினார். செம்பூரணிப் பகுதியில் தனது பெயரிலும், தாயார் பெரியலும் சமீபத்தில் வாங்கிய 3 சொத்துக்குரிய வரிப் போடுவது தொடர்பாக அவரிடம் பேசினார்.

ஒவ்வொரு சொத்துக்கும் வரி ரசீது போடுவதற்கு தலா ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இறுதியில் ரூ.8 ஆயிரம் தருவதாக இளங்கோவன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இருப்பினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார். போலீஸார் தந்த யோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் நேற்று மதியம் மண்டல அலுவலகத் திற்கு இளங்கோவன் சென்றார்.

அங்கு பணியில் இருந்த முத்துக்கனீஸ்வரனிடம் ரூ. 8 ஆயிரத்தை அவர் கொடுத்தபோது, அருகில் மறைந்து இருந்த டிஎஸ்பி சத்யசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புக் குழுவினர் கையும், களவுமாக பிடித்து உதவியாளர் முத்துக்கனீஸ்வரனை கைது செய்தனர்.

விசாரணைக்கென சில ஆவணங்களை அவரது அலுவலகத்தில் இருந்து கைப்பற்றிச் சென்றதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in