

தனியார் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க சீட் வாங்கிக் கொடுப்பதாகக்கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக வேலூர் நகர பாமக முன்னாள் செயலாளரை மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கவுதமபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை ஆனந்தி (54). இவரது மகளுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கிக் தருவதாக வேலூர் கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேலூர் நகர பாமக முன்னாள் செயலாளர் வெங்கடேசன் (49) என்பவர் கூறியுள்ளார்.
இதை நம்பி கடந்த 2015-ஆம் ஆண்டு வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் வெங்கடேசனிடம் ரூ.5 லட்சம் பணத்தை ஆனந்தி கொடுத்துள்ளார்.
ஆனால் அவர் கூறியபடி தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். மேலும், வாங்கிய பணத்தைத் திரும்பக் கேட்டபோது ஆனந்தியை மிரட்டியுள்ளார். அதேபோல், வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடமும் தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்புக்கு சீட் வாங்கிக் கொடுப்பதாகக்கூறி வெங்கடேசன் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். அவரையும் ஏமாற்றிவிட்டுப் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக வேலூர் மாவட்டக் குற்றப் பிரிவில் ஆனந்தி, சதீஷ்குமார் ஆகியோர் தனித்தனியாகப் புகார் மனு அளித்தனர். இதன் மீது காவல் ஆய்வாளர் இலக்குவன் விசாரணை நடத்தி வெங்கடேசனை இன்று (டிச.18) மாலை கைது செய்தார்.
கைது செய்யப்பட்டுள்ள வெங்கடேசன் பல்வேறு நபர்களிடமும் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. எனவே, வெங்கடேசனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.