

மதுரை மாநகராட்சியின் ஒப்பந்தப் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சுகாதார ஆய்வாளர் ஒருவர் மீது போலீஸார் வழக்கு பதிந்து, அவரை தேடுகின்றனர்.
மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் அனிதா (31) இவர், மதுரை மாநகராட்சி, கிழக்கு வெளிவீதியிலுள்ள 50-வது வார்டு வரி வசூல் மையத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிகிறார்.
இதே 50-வது வார்டு சுகாதார ஆய்வாளர் முருகன். இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, ஜெனிபர் அனிதாவுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், சில பெண் ஊழியர்களுக்கும் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், சம்மதிக்காக ஒப்பந்த ஊழியர்களை வேலைவிட்டு நிறுத்துவேன் எனவும் முருகன் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கடந்த 4ம் தேதி மதுரைக்கு வந்த தமிழக முதல்வரிடம் முருகனுக்கு எதிராக புகார் கொடுக்க தல்லாகுளம் பகுதியில் முயன்ற ஜெனிபர் அனிதாவை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
அவரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் ஆணையர் பிரேமானந்த் உத்தரவின்பேரில் அவரது புகார் தொடர்பாக துணை ஆணையர் ஒருவர் ஜெனிபர் அனிதாவிடம் விசாரித்தார்.
இந்நிலையில் ஜெனிபர் அனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் முருகன் மீது விளக்குத்தூண் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடுகின்றனர்.
சுகாதார ஆய்வாளர் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, மிரட்டிய விவகாரம் மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.