மதுரையில் வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள்: தற்கொலையா என போலீஸ் தீவிர விசாரணை

மதுரையில் வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள்: தற்கொலையா என போலீஸ் தீவிர விசாரணை
Updated on
1 min read

மதுரை வைகை ஆற்று நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியிலுள்ள வீரகாளியம்மன் கோயில் அருகில் வசிப்பவர் முருகன். இவர், மதுரை டவுன் ஹால் ரோடு பகுதியில் புரோட்டா கடையில் வேலை பார்க்கிறார்.

இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். மூத்த மகள் பெயர் சுதி (13), இரண்டாவது மகள் சுஜி (12). இருவரும் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் இருவரும் பென்சில், பேனா உள்ளிட்ட பொருட்கள் வேண்டும் என, அவரது தாயிடம் கேட்டுள்ளனர். வாங்கிக் கொடுக்க மறுத்த அவர், ‘வேலை முடித்து அப்பா வந்தபின் வாங்கலாம்’ எனக் கூறியிருக்கிறார்.

ஆனாலும், கேட்காமல் மீண்டும் பேனா, பென்சில் கேட்டு தாயை நச்சரித்ததாகக் கூறப்படுகிறது. வேறு வழியின்றி தாயார் திட்டியுள்ளார்.

அதன்பின்னர் சுதி, சுஜி இருவரும் வீட்டைவிட்டு வெளியே சென்றனர். இரவு ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பிள்ளைகளை உறவினர், தோழிகள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது தொடர்பாக கரிமேடு போலீஸில் புகார் தெரிவித்தனர். சிறுமிகளின் அடையாளங்களைக் கொண்டு போலீஸார் தேடினர். மைக் மூலம் அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் வைகை ஆற்றில் மதுரை எல்ஐசி பாலம், அதற்கு முன்பாக சற்று தூரத்தில் இன்று காலை இரு சிறுமிகளின் உடல்கள் கரை ஒதுங்கின.

இது பற்றி தகவல் அறிந்த போலீஸார் உடல்களை மீட்டு விசாரித்த போது, நேற்று மாயமான முருகனின் மகள்கள் என, அடையாளம் தெரிந்தது. இரு உடல்களும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சூழலில் இருவரும் எப்படி ஆற்று தண்ணீரில் விழுந்தனர் என்பது தெரியவில்லை. ஒருவேளை குளிக்கச் சென்றபோது, தண்ணீரால் இழுத்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாமா அல்லது தாய் திட்டியதால் விரக்தியில் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்தார்களா அல்லது வேறு காரணமாக இருக்குமா என, சந்தேகிக்கப்படு கிறது.

இருவேறு கோணங்களில் கரிமேடு, செல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர். ஏற்கெனவே ஒருமுறை இருவரும் மாயமாகி, தோழி ஒருவரின் வீட்டில் இருந்து மீட்டு வரப்பட்டனர்.

இருப்பினும், உயிரிழந்த சுதி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று இருந்ததாகவும், அவரது பேச்சை சுஜி கேட்டு தண்ணீருக்குள் குதித்து இருக்கலாம் என, போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். இச்சம்பவம் ஆரப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in