

மதுரை அருகே மது குடிப்பதைக் கண்டித்த தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸார் தேடுகின்றனர்.
மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள ராஜகம்பீரம் காலனியைச் சேர்ந்தவர் மது (45). இவருக்கு மூன்று மனைவிகள். இவர்களுக்கு 8 பிள்ளைகள். மூத்த மனைவியின் மகன் மணிகண்டன்(25). ஓட்டுநராக இருக்கும், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் அடிக்கடி மது அருந்துவதை தந்தை கண்டித்துள்ளார். மகனின் குடிபோதை தடுப்பு மறுவாழ்வு மையத்தில் சேர்க்க, மது திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்கனவே பிரச்னை இருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் தந்தை, மகனுக்குள் தகராறு ஏற்பட்டபோது, போதையில் இருந்த மணிகண்டன் தந்தையை கட்டை, கல்லால் அடித்து கொலை செய்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தலைமறைவான மணிகண்டனை தேடுகின்றனர்.