திருப்பூர் அருகே சாலை விபத்து: காவலர் உள்பட 6 பேர் உயிரிழப்பு

திருப்பூர் அருகே சாலை விபத்து: காவலர் உள்பட 6 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் காவலர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

காங்கயத்தை அடுத்த வெள்ளகோவில் உத்தாண்ட குமார வலசு பிரிவு அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காவல் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் அதிகாலை 3 மணி அளவில் சாலைத் தடுப்பு மீது சவுக்கு பூட்டி ஏற்றி வந்த லாரி மோதியது.

இதையடுத்து, லாரியை சிறிது தூரம் தள்ளிநிறுத்திவிட்டு லாரி ஓட்டுநர் மற்றும் பணியில் இருந்த காவலர் ரவிசந்திரன் (45) ஆகியோர் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே திசையில் வேகமாக வந்த கார் காவலர் ரவிசந்திரன், லாரி ஓட்டுநர் மீதும் மோதி விட்டு லாரியின் மீதும் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காவலர், லாரி ஓட்டுநர், காரில் இருந்த 4 பேர் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் 6 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு: இதனிடையே, “வெள்ளக்கோவில் காவல் நிலைய காவலர் ரவிச்சந்திரன் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

காவலர் ரவிச்சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

திருப்பூர் அருகே சாலை விபத்து: காவலர் உள்பட 6 பேர் உயிரிழப்பு
விசாகப்பட்டினத்தில் 65 அடி உயர திரிசூலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in