

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கண்டகாணப்பள்ளியைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணா (37). மாரச்சந்திரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார். இருவரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மகேஷ்குமாருக்கு கடனாக கொடுத்த ரூ.30 லட்சத்தைக் கேட்டு லட்சுமி நாராயணா அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் குமார், 2018-ம் ஆண்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமி நாராயணாவை காரில் கடத்திச் சென்று கொலை செய்து உடலை பஞ்சப்பள்ளி சாலையில் வீசிச் சென்றார்.
இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, மகேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களான ராஜ்குமார், வெங்கடாஜலபதி, சுரேஷ், தக்கட்டியைச் சேர்ந்த சுரேஷ், பெண்ணாகூர் ஹரீஷ், கர்நாடக மாநிலம் சூரி ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
இதில், வழக்கு விசாரணையின்போது சுரேஷ் உயிரிழந்த நிலையில், மகேஷ்குமார் உள்ளிட்ட 6 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும் விதித்தார். மேலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.