

காரைக்கால்: திருநள்ளாறில் ஜோதிடர்கள் மாநாடு மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளதாக தருமபுரம் ஆதீன கர்த்தர் தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
இதற்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கி, பிப்.28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்பதற்காகவும், பூஜை ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருநள்ளாறில் உள்ள ஆதீன கிளை மடத்தில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: பிப்.20-ம் தேதி முதல் 10 நாட்கள் 6 கிரகங்கள் ஒரே கட்டத்தில் (ராசியில்) கூடியிருக்கின்றன. இதனால், பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, சப்த நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு பூஜிக்கப்பட்டு, அது திருநள்ளாறு நளன் தீர்த்தத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.
மேலும், ஓதுவார்களைக் கொண்டு 2 நாட்கள் தொடர்ச்சியாக நவக்கிரகங்களுக்கு கோளறு பதிகம் பாராயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மார்ச் 6-ம் தேதி காலை 8.24 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது.
இதையொட்டி, நளன் தீர்த்தத்தில் புனித நீராடுவோர் ஆடைகளை கழற்றி போட்டுவிட்டுச் செல்கின்றனர். இது பாவச் செயல். நளன் தீர்த்தத்தில் புனித நீராடல் மட்டுமே செய்ய வேண்டும். இங்கு கொடுக்கப்படும் பிரசாதத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்வதுதான் சிறப்பு.
கிரக நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மார்ச் 1 முதல் 4 நாட்கள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பிரபல ஜோதிடர்கள் பங்கேற்கின்றனர். ஆன்மிகம், இறைவழிபாடு, சமயத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஜோதிடர்களின் பங்கு, அரசு மூலமாக செய்யும் உதவிகள் போன்ற அம்சங்கள் மாநாட்டில் இடம்பெறும்.
தருமபுரத்தில் ஆதீனத்தின் சார்பில் இலவச மருத்துவமனை கட்டப்படுகிறது. மேலும் கல்விப் பணி உள்ளிட்ட பல்வேறு சமூக தொண்டுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக அரசு இதற்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அதேபோல், புதுவை அரசும் ஒத்துழைப்பு அளித்தால், இங்கும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்ய முடியும்.
திருநள்ளாறில் உள்ள ஆதீன மடத்தில் சனிக்கிழமைதோறும் அன்னதானம் அளிக்கப்படுகிறது. இதை அனைத்து நாட்களிலும் அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தருமபுரத்தில் 3 வேளையும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு தலா ரூ.10-க்கும் மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது. அத்திட்டத்தை இங்கும் செயல்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.