

மதுரை மேலூரில் பொறியாளர் ஒருவரை கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி, கால்வாயில் வீசியக் கொடூரம் நடந்துள்ளது.
மதுரை மேலூர் தெற்குபட்டி பகுதியில் செல்லும் பெரியாறு பாசனக் கால்வாயின் 7-வது மதகுப் பகுதியில் சாக்குமூட்டையில் கட்டிய நிலையில் மனித உடல் இன்று காலை ஒதுங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சாக்கு மூட்டையில் தார்ப்பாயில் சுற்றி இருந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றினர்.அவரது கழுத்து, தொண்டை யில் காயம் இருப்பது தெரிந்தது. சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது பற்றி விசாரித்தபோது, கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசப்பட்டவரின் பெயர் மதன்குமார் (25). பி.இ சிவில் பட்டதாரி. கான்டிராக்டர் தொழில் புரிந்தவர் என்பது தெரிந்தது.
ஆட்டுக்குளத்தைச் சேர்ந்த இவரது தந்தை மனோகரன் மேலூரிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து நடத்துனராக பணிபுரிகிறார்.
முதல்கட்ட விசாரணையில், ஆட்டுக்குளம் பகுதியில் நேற்று கட்டிடப் பணியில் இருந்த அவரை நண்பர் ஒருவர் போனில் அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் டூவீலரில் நண்பரின் தோட்டத்துக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது.
இதற்கிடையில், சாக்குமூட்டையில் கட்டிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. பெண் விவகாரம் தொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டு, கால்வாயில் வீசப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரிப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மதன்குமாரன் நண்பர் வினோத்பாண்டி என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.