

விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 6 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி கோவிந்தசாலையைச் சேர்ந்தவர் மணி (எ) மணிகண்டன் (36). பெயிண்டரான இவர் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவராகவும் இருந்தார். கடந்த 4-ம் தேதி இரவு இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகே ஒரு கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மணிகண்டனின் உறவினரான ராஜசேகர் என்பவரே இந்தக் கொலையினைத் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செய்ததும், ரசிகர் மன்றத் தலைவர் பதவி தொடர்பான தகராறில் இந்தக் கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது. விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவராக மணிகண்டன் இருந்து வந்த நிலையில் ராஜசேகர் செயலாளராக இருந்துள்ளார். ஆனால், அவர் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜசேகர் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு மணிகண்டன்தான் காரணம் என அவர் நினைத்தார். இருந்தபோதிலும் அவர் தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாகச் செயல்பட்டார். இதனால் அவர்களுக்கு இடையேயான மோதல் அதிகரித்தது.
இதன் காரணமாகவே மணிகண்டன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொலை தொடர்பாக ராஜசேகர் (33), அவரது கூட்டாளிகளான சுனில் (20), ஜான்சன் (24), சந்தோஷ் (28), மாறன் (27) மற்றும் ஒரு சிறுவன் உட்பட 6 பேரைக் காவல் துறையினர் நேற்று முன்தினம் (அக். 6) கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 4 கத்திகள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்ட 6 பேருக்கும் கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வக முடிவு வந்த நிலையில் இன்று (அக். 8)அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறுவன் அரியாங்குப்பம் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலும், மற்ற 5 பேரும் காலாப்பட்டு மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.