ஈரோடு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

விபத்தினை ஏற்படுத்திய பேருந்து கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்படுகிறது.
விபத்தினை ஏற்படுத்திய பேருந்து கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்படுகிறது.
Updated on
1 min read

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி, இன்று (செப். 3) காலை நகர அரசுப் பேருந்து (தடம் எண்-42) வந்துகொண்டு இருந்தது. லக்காபுரம் அருகே பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மொடக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்தை அப்புறப்படுத்திய போது, பேருந்தின் அடிப்பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் அதில் பயணித்த நான்கு பேரும் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டனர். மேலும், பேருந்தில் பயணித்த பயணிகள் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், பேருந்தில் பயணித்து காயமடைந்த பயணிகளை முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே காவல்துறை விசாரணை செய்ததில், விபத்தில் இறந்தவர்கள் மொடக்குறிச்சி குளூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, மரகதம், பாவாத்தாள், மோகனாபுரி என்பதும், நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

கரோனா பாதிப்பால் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு, பொது போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் நடந்த இந்த பேருந்து விபத்து அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in