வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து: மேலூரைச் சேர்ந்த ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்

கன்னிவாடியில் வாகனசோதனையில் ஈடுபட்டபோது கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்த தலைமை காவலர் திருப்பதி.
கன்னிவாடியில் வாகனசோதனையில் ஈடுபட்டபோது கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்த தலைமை காவலர் திருப்பதி.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரை இருசக்கரவாகனத்தில் வந்தவர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்தார்.

கன்னிவாடி காவல்நிலையம் முன்பு இன்று காலை போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கரவாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி லைசென்ஸ், முகக்கவசம் அணியாதது குறித்தும் கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இருசக்கரவாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென கத்தியை எடுத்து தலைமைக் காவலர் திருப்பதியைக் குத்தினார். திருப்பதியின் தலையில் குத்துபட்டதில் படுகாயமடைந்தார்.

உடன் இருந்த போலீஸார் இருசக்கரவாகனத்தை ஓட்டிவந்த நபரை பிடித்தனர். கத்தியால் குத்திய நபர் தப்பியோடிவிட்டார்.

படுகாயமடைந்த தலைமைக் காவலர் திருப்பதியை உடனடியாக சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இவரை திண்டுக்கல் டி.ஐ.ஜி., முத்துச்சாமி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா ஆகியோர் நேரில் நலம் விசாரித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

பிடிபட்ட நபரிடம் கன்னிவாடி போலீஸார் தொடர் விசாரணை நடத்தினர். இதில் பிடிபட்டவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டாநத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(22) என்பது தெரியவந்தது. தப்பியோடியவர் அதே ஊரைச்சேர்ந்த

முத்துலிங்கம்(22). பிடிபட்ட இருசக்கரவாகனத்தில் அரிவாள், கத்தி ஆகியவை இருந்துள்ளது. சங்கிலி பறிப்பு அல்லது வேறு ஏதாவது செயல்களுக்காக இவர்கள் இருசக்கரவாகனத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்திருக்கலாம், போலீஸார் தங்களை கண்டுபிடித்துவிட்டனர் என்பதால் தாக்கிவிட்டு தப்பமுயன்றுள்ளனர், என விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய முத்துலிங்கத்தை போலீஸார் தேடிவருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in