

திமுக பெயரில் போலி முகநூல் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது தொடர்பாக மதுரையில் அக்கட்சியின் நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்தனர்.
மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலர் கோ. தளபதி தலைமையில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் குழந்தைவேலு, வேலுச்சாமி, சரவணன் எம்எல்ஏ., உள்ளிட்ட நிர்வாகிகள் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கொடுத்த புகார் ஒன்றில் கூறியிருப்பதாவது:
சமூக விரோதிகள் சிலர், மதுரை மாவட்ட திமுக என்ற பெயரில் போலியான முகநூல் கணக்கை உருவாக்கி, அதன்மூலம் திமுக அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் புகைப்படங்களை, தவறான நோக்கில் சித்தரித்து, பதிவுகளைப் பகிர்கின்றனர்.
இளைஞர்கள், வலைதள உபயோகிப்பாளர்கள் மத்தியில் திமுகவுக்கு இருக்கும் நற்பெயரை கெடுக்கும் தீய நோக்கத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர்.
இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற சமூக விரோதிகள் மீது உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்குப் பின்னணியில் காரணமாக இருக்கும் நபர்களை கைது செய்யவேண்டும். இது போன்ற போலி வலைதளங்களை முடக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.