மதுரையில் சைக்கிளில் பின்தொடர்ந்து மூதாட்டியைத் தாக்கி செயின் பறித்த இளைஞர்: வைரலாகும் சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி  

மதுரையில் சைக்கிளில் பின்தொடர்ந்து மூதாட்டியைத் தாக்கி செயின் பறித்த இளைஞர்: வைரலாகும் சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி  
Updated on
1 min read

சைக்கிளில் பின்தொடர்ந்து பெண்ணைத் தாக்கி செயின் பறித்த இளைஞரை மதுரை போலீஸார் சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு தேடி வருகின்றனர்.

மதுரை கிழக்கு வெளிவீதியிலுள்ள மைனா தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆத்மராம் மனைவி உமா(61). இவர் நேற்று முன்தினம் தெற்குவாசல் பகுதியிலுள்ள லாரி செட் பாண்டியன் முதல் தெருவில் நடந்து சென்றார்.

அப்போது சைக்கிளில் பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர், மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினைப் பறித்தார். மூதாட்டி செயினை விடாமல் தடுத்து 10 நிமிடத்திற்கு மேலாகப் போராடியும், முடியவில்லை. அவரைக் கீழே தள்ளிவிட்டு நகையைப் பறித்துக் கொண்டு அந்த இளைஞர் தப்பினார். கீழே விழுந்ததில் மூதாட்டி காயமடைந்தார்.

இது குறித்த புகாரின்பேரில், தெற்குவாசல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். சைக்கிளில் வந்த இளைஞர் உமாவை தாக்கி செயினை பறித்துக் கொண்டு தப்பியது தெரியவந்தது.

பெரும்பாலும், மதுரை நகரில் இரு சக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து பெண்கள் உள்ளிட்டோரிடம் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவர். இருப்பினும், முதன் முறையாக சைக்கிளில் சென்று ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி, போலீஸாருக்கும், பொது மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் கரோனா தடுப்புக்கான முழு ஊரடங்கு என்பதால் ஆட்கள் நடமாட்டமின்றி இருந்தது வழிப்பறி திருடனுக்கு வசதியாக இருந்துள்ளது.

மேலும், கரோனா ஊரடங்கால் வேலையிழப்பு போன்ற காரணத்தால் வழிப்பறி சம்பவம் மதுரையில் அதிகரிக்கிறது என்றாலும், சைக்கிளில் சென்று குற்றச்செயலில் ஈடுபடலாம் என்ற தைரியம் சிலருக்கு உருவாகியுள்ளது.

போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in