

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சென்னைக் கொள்ளையனை புதுச்சேரி போலீஸார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்து ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி வெங்கட்டா நகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் ரஹானா பேகம் (55). இவர் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் மாதத்துக்கு ஒரு முறை புதுச்சேரிக்கு வருவது வழக்கம். கடந்த மே மாதம் பணி நிமித்தமாக ரஹானா பேகம் டெல்லி சென்றார். பின்னர், கரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் அவர் புதுச்சேரிக்கு வர முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி அவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அடுக்குமாடிக் குடியிருப்பு சங்கத் தலைவர் ஜெயச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து, கிழக்கு எஸ்பி மாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், முத்துக்குமரன் மற்றும் கைரேகை நிபுணர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனி 4-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த மார்க்கெட் சுரேஷ் (எ) சுரேஷ் (48) தலைமையிலான கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் இவர் மீது தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்துக் கொள்ளையடித்த வழக்குகள் உள்ளன. சென்னை மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கொள்ளையடித்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பின்னர், புதுச்சேரி காலாப்பட்டில் தங்கி இருந்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, காலாப்பட்டு நடுத்தெருவில் பதுங்கி இருந்த சுரேஷை போலீஸார் இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.22 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், கொள்ளை அடிப்பதற்குப் பயன்படுத்திய ஆடி பிடுங்கி, ராடு உள்ளிட்ட கருவிகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, கரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு சுரேஷை அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிந்து முடிவு வெளியான பிறகு இந்தக் கொள்ளையில் அவருடன் சேர்ந்து வேறு யார் ஈடுபட்டனர் என்றும், எத்தனை வீடுகளில் கொள்ளை அடித்துள்ளார் என்றும் போலீஸார் விசாரிக்க உள்ளனர். மேலும், சிறப்பாகப் பணியாற்றி சென்னைக் கொள்ளையனைப் பிடித்த பெரிய கடை போலீஸாரை சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி பிரதிக்ஷா கொடாரா பாராட்டினார்.