மதுரையில் ஓட்டுநரைத் தாக்கிய புகாரில் 6 காவலர்கள் மீது நடவடிக்கை

மதுரையில் ஓட்டுநரைத் தாக்கிய புகாரில் 6 காவலர்கள் மீது நடவடிக்கை
Updated on
1 min read

மதுரையில் இளைஞரைத் தாக்கி பணம் பறிக்க முயற்சி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் டெல்டா போலீஸார் 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள உலகநேரியைச் சேர்ந்தவர் அரவிந்தராஜ். இவர் வழக்கறிஞர் பாஸ்கர மதுரம் என்பவரிடம் ஓட்டுநராக உள்ளார்.

கடந்த 18-ம் தேதி இரவு 7.30 மணிக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றபோது, மதுரை நகர் டெல்டா போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் அவரை விசாரித்துள்ளனர்.

சீருடை அணியாமல் இருந்த அவர்களை போலீஸ் எனத் தெரியாமல் ‘‘ நீங்கள் யார், என்னை விசாரிக்கிறீர்கள்’’ என ஓட்டுநர் கேட்டுள்ளார்.

அப்போது, அரவிந்தராஜின் வாகனத்தைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். வழக்கறிஞர் ஒருவரின் ஓட்டுநர் எனக் கூறியும் அவரைத் தாக்கிய டெல்டா போலீஸ் படையினர் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மிரட்டல் குறித்து மதுரை புதூர் காவல் நிலையத்தில் அரவிந்தராஜ் புகார் அளித்தார்.

இப்புகாரின் எதிரொலியாக சம்பவத்தன்றே 5-வது டெல்டா போலீஸ் படையில் பணியிருந்த 6 காவலர்களை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்ததாக காவல் துணை ஆணையர் சிவபிரசாத் தெரிவித்தார்.

மதுரை செல்லூர் பாலத்தில் ஓராண்டுக்கு முன், டெல்டா போலீஸார் தாக்கியதில் சிம்மக்கல் வியாபாரி ஒருவர் இறந்ததாகக் குற்றச்சாட்டு உள்ள நிலையில், மீண்டும் இளைஞர் ஒருவரை டெல்டா படையினர் தாக்கியதாகப் புகார் எழுந்தது.

இந்நிலையில், 6 காவலர்களையும் சம்பவத்தன்றே ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in