சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவல் அதிகாரிகள் ஸ்ரீதர், ரகுகனேஷுக்கு சலுகைகள் இல்லை; சிசிடிவி மூலம் கண்காணிகிறோம்: மதுரை சிறை அதிகாரி தகவல்
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதாகி , மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேரும் சிசிடிவி மூலம் தினமும் கண்காணிக்கப்படுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் பேரூரணி என்ற கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு தங்களுக்கு அச்சம், மிரட்டல் இருப்பதாக அவர்கள் கூறியதன் பேரில், 3 நாட்களுக்கு முன்பு, மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
கரோனா தடுப்புக்கான தனிப்படுத்தும் அறையில் 5 பேரும் அடைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுளளனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தில் கைதானவர்கள் என்பதால் சிறைக்குள் வேறு எந்த வடிவிலும் அவர்களுக்கு எதிராக எதுவும் நடந்திடக்கூடாது என்ற அடிப்படையில் சிசிடிவி மூலம் சிறை நிர்வாகம் கண்காணிக்கிறது.
இதற்கிடையில், சிறைக்குள் அவர்களுக்கு சில சலுகை செய்து தரப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. சமூக வலைத்தளத்திலும் இது தொடர்பான தகவல்கள் பரவுகின்றன.
இது குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பரபரப்பான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் என்பவதால், அவர்களை தனி அறையில் வைத்து 24 மணி நேரமும் கண்காணிக்கிறோம்.
சிறையில் பிற கைதிகளுக்கு என்ன விதிமுறையோ அதே தான் அவர்களுக்கும் பின்பற்றப்படுகிறது. தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு எந்த சலுகையும் இல்லை. தேவையின்றி சிலர் பொய் தகவல்களை பரப்புகின்றனர்,’’ என்றனர்
