

மதுரையில் பசுமாட்டை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிய உரிமையாளர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மாட்டுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் முத்துக்கனி. இவர் 15க்கும் மேற்பட்ட பசுமாடுகள் வளர்க்கிறார். இவற்றில் ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வெளியில் சென்றது. மீண்டும் வீடு திரும்பவில்லை. பிறகு தானாகவே வீட்டுக்கு திரும்பியது.
இதில் ஆத்திரமடைந்த முத்துக்கனி, தான் வளர்க்கும் மாடு என்று கூட பார்க்காமல் உருட்டுக் கட்டையால் அந்த மாட்டை பலமாகத் தாக்கினார். இதில் பசு மாடு மயங்கி விழுந்தது. இக்காட்சிகள் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, பிறகு சமூக வலைதளத்திலும் வைரலானது.
இது பற்றி தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸார் மிருக வதைச் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்தது. முத்துக்கனியை காவல் ஆய்வாளர் பெத்ராஜ் கைது செய்தார்.
இதற்கிடையில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜ்திலகம் உத்தரவின்பேரில், கால்நடை மருத்துவர்கள் காயமடைந்த பசு மாட்டுக்கு சிகிச்சை அளித்தனர். குறிப்பிட்ட நாட் களுக்கு மாட்டுக்கு ஓய்வளிக்கவேண்டும் என, அறிவுறுத்தினர்.