

தமிழகத்தில் தலைக்கவசம் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு தற்போது இ- சலான் மூலம் அபராதம் வசூலிக்கும் திட்டம் உள்ளது.
மதுகுடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவோரிடம் போலீஸார் அபராதம் வசூலிப்பதில்லை. போலீஸார் வழங்கும் விதிமீறலுக்கான ஆன்லைன் ரசீது மூலம் நீதிமன்றத் தில் அபராதம் செலுத்தவேண்டும்.
போதையில் வாகனங்களை ஓட்டுவோரை சம்பவ இடத்தில் வாயால் ஊதச் செய்வதற்கு பதிலாக ‘பிரீத்திங் அனலைசர்’ என்ற கருவிகள் போக்குவரத்து, சட்டம், ஒழுங்கு போலீஸாருக்கு வழங்கப்பட்டது.
தற்போது கரோனா தொற்று பரவும் என்ற அச்சத்தால் மார்ச் 22-ம் தேதிக்கு பின், அக்கருவியை பயன்படுத்தக்கூடாது என, தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அனலைசர் கருவியின்றி குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் காவல்துறையினருக்கு உள்ளது. மது குடித்து இருக்கிறார் என, தெரிந்தாலும், அரசு மருத்துவமனையில் சான்றிதழ் பெறவேண்டிய கட்டாயத்தால் அதுவும் முடியாத நிலையில், வேறு வழியின்றி குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவராக இருந்தால் அவர்களை வாயால் ஊதச் செய்து, பிற போக்குவரத்து விதிமீறல் வழக்கு போடவேண்டும் என்ற காவல்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவால் போலீஸார் அதிருப்தியில் உள்ளனர்.
மதுரை உட்பட பெரும்பாலான இடங்களில் இந்நிலையை பின்பற்றுங்கள் என, அதிகாரிகள் வற்புறுத்துவதாக வும், கரோனா தொற்று பயத்தில் பணிபுரியவேண்டி நிலை இருப்பதாகவும் போலீஸார் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ குடிபோதையில் வாகன ஓட்டுவோரை கண்டறியும் அனலைசர் கருவியை பயன்படுத்த தடை உள்ளது. காவல்துறை கண் எதிரே ஒருவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை எப்படி அனுமதிக்க முடியும்.
இது போன்ற நபர்களால் பிறருக்கு ஆபத்து ஏற்படும். இதைத்தடுக்க, குடிபோதையில் தல்லாடுவது போன்று தெரிந்தால், அவர்களை எச்சரித்து, ஏதாவது போக்குவரத்து வீதிமீறல் வழக்கு போடலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாயால் ஊதிக் கண்டறிய எந்த உத்தரவும் போடவில்லை,’’ என்றார்.