மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் எதிரே ஜவுளிக்கடையில் பயங்கர தீ: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் எதிரே ஜவுளிக்கடையில் பயங்கர தீ: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதம்
Updated on
1 min read

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் எதிரே ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமடைந்தன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதி எதிரே சித்திரை வீதியில் நர்வின் என்ற பெயரில் ஜவுளிக் கடைஒன்று செயல்பட்டது.

நேற்று மழை காரணமாக முன் கூட்டியே கடை அடைக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் அந்தக் கடையில் திடீரென தீ பிடித்து எரிவது தெரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த மீனாட்சி கோயில், திடீர்நகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரைந்து தீயை அணைக்கத் தொடங்கினர்.

ஜவுளிக்கடை என்பதால் இருப்பு வைக்கப்பட்டிருந்த துணிகளில் வேகமாக தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தீ கட்டுக்கடங்காததால் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டு, மேலும், தல்லாகுளம், அனுப்பானடி தீயணைப்பு நிலைய வீரர் களும் வாகனங்களுடன் வரவழைக்கப்பட்டனர்.

அடுக்குமாடி கட்டிடங்களில் துரிதமாக தீயை அணைக்கும் வாகனம், ஜேசிபி இயந்திரமும் அங்கு வரவழைக்கப்பட்டது. மண்டல தீயணைப்பு இயக்குநர் கல்யாண குமார் தலைமையில் நிலைய அலுவலர்கள் உட்பட 50க்கும் மேற் பட்டவீரர்கள் அருகிலுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு பரவாமல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், பல லட்சம் மதிப்புள்ள நவீன ரக ஆடைகள் தீயில் எரிந்து சேதமடைந்தனர்.

அக்னி நட்சத்திர வெயில் நிறைவு நாளில் இடி, மின்னல், காற்றுடன் பெய்த கனமழையால் மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், விளக்குத் தூண் போலீஸார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in