மதுரை அருகே மதுகுடிப்பதைத் தட்டிக்கேட்ட பெண் வீடு மீது வெடிகுண்டுகள் வீச்சு: நாய் உயிரிழப்பு- ஒருவர் கைது

மதுரை அருகே மதுகுடிப்பதைத் தட்டிக்கேட்ட பெண் வீடு மீது வெடிகுண்டுகள் வீச்சு: நாய் உயிரிழப்பு- ஒருவர் கைது
Updated on
1 min read

மதுரை அருகே மதுகுடிப்பதை தட்டிக்கேட்ட பெண்ணின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் நாய் ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்படடார்.

மதுரை மாவட்டம், பாலமேடு அருகிலுள்ள ராமக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்த விவசாயி சசிகுமார். இவரது மனைவி செல்வராணி (34). இவரது தம்பி முருகன்(30). இவரும், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சின்னத்துரை (55) என்பவரும் நேற்று இரவு 10 மணிக்கு மதுக்குடித்தனர். இதன் பின், செல்வ ராணி வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது, தம்பி மதுபோதையில் இருப்பதைக் கண்டு ஆத்திரம் அடைந்த செல்வராணி ‘ தனது தம்பியை தேவையின்றி அழைத்துக்கொண்டு போய் மதுக்குடிக்க வைத்து கெடுக்கிறாய்’ என, சின்னத்துரையை திட்டியுள்ளார். தம்பியைக் கண்டிக்காமல் என்னைத் திட்டக்கூடாது என, எதிர்க் கேள்வி எழுப்பிய சின்னத்துரை செல்வராணியிடம் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் சிறிது நேரத்தில் அங்கு வந்த சின்னத்துரை செல்வராணி வீடு மீது நான்கு நாட்டு வெடிகுண்டுகளை அடுத் தடுத்து வீசிவிட்டு தப்பினார்.

இதில் ஒரு குண்டு மட்டும் வெடித் தது. சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், வீட்டுக்கு அரு கில் கிடந்த 3 வெடிகுண்டுகளில் ஒன்றை அங்கு வந்த நாய் கடித்தபோது, வெடித்து தலைச்சிதறிய நிலையில் அந்த நாய் உயிரிழந்தது.

இது பற்றி தகவல் அறிந்த பாலமேடு காவல் ஆய்வாளர் நிர்மலா உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். குண்டு வீசிய இடத்தை ஆய்வு செய்தனர்.

வெடிக்காமல் கிடந்த இரு நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். இது தொடர்பாக முருகன், சின்னத்துரை மீது வழக்குபதிவு செய்தனர்.

சின்னத்துரையை கைது செய்தனர். தலைமறைவான முருகனை தேடுகின்றனர். குடிபோதையில் பெண் வீட்டில் குண்டு வீசிய சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in