

திருக்கல்யாணத்தை ரத்து செய்யக் கோரியதாக தன்னை முன்வைத்து சமூகவலைதளங்களில் பரவும் அவதூறு மீது நடவடிக்கை கோரி மதுரை எம்.பி. வெங்கடேசன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் மதுரை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது போன்று, திருக்கல்யாணத்தையும் ரத்து செய்யவேண்டும். மதுரை எம்பி சு.வெங்கடேசன் அறிவிப்பு என்றும், ஓட்டுபோட்ட மக்களே இது போதுமா எனவும் வாட்ஸ் அப், பேஸ்புக்-ல் எனது பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய செய்தி பதிவாகி பல்வேறு குரூப்பிலும் பகிரப்படுகிறது.
இச்செய்தி ரேவதி என்ற பெண் பெயரால் பதிவிடப்பட்டு, பலருக்கும் பரப்பப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பின் காரணமாக சித்திரைத் திருவிழா நடத்துவதை தமிழக அரசு நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் நான் ரத்து செய்யவேண்டும் என, அறிவித்ததாக உண்மைக்கு மாறாக பொய்யான, எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் மேற்படி பதிவு பதிவிடப் பட்டுள்ளது. அப்பதிவினை இத்துடன் இணைத்து அனுப்பியுள் ளேன்.
எனவே, பொய்யான பதிவை என் பெயரில் பதிவிட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், மேற்படி பதிவை நீக்கிவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து எம்பியிடம் கேட்டபோது, வேண்டுமென்றே திட்டமிட்டு எனக்கு எதிராக பாஜகவினரால் இந்த பொய் செய்தி பரப்புவது தெரியவருகிறது. அது பற்றி நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் அளித்துள்ளேன், என்றார்.