போலீஸாரின் கரோனா பணியை சாதகமாக்கும் கும்பல்: மதுரை புறநகரில் அதிகரிக்கும் டூவீலர்கள் திருட்டு

போலீஸாரின் கரோனா பணியை சாதகமாக்கும் கும்பல்: மதுரை புறநகரில் அதிகரிக்கும் டூவீலர்கள் திருட்டு
Updated on
1 min read

கரோனா தடுப்பு பாதுகாப்பில் போலீஸார் கவனம் செலுத்துவதை சாதகமாக்கிய கும்பல், மதுரை புறநகர்ப் பகுதியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தியிருக்கும் இரு சக்கர வாகனங்களை திருடுவதாக புகார் எழுந்துள்ளது.

அனைத்து இடங்களிலும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதில் போலீஸார் தீவிரம் காட்டுகின்றனர். காவல் நிலையங்களில் பிற புகார்கள் குறைந்தால் ஊரடங்கு பாதுகாப்பு பணிக்கே முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது.

பொது மக்கள், வியாபாரிகள் என, வெளியில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் வெளியில் தலை காட்டுவதில்லை என்றாலும், சில நாட்களாகவே மதுரை புறநகர் பகுதியில் வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருடுபோவது அதிகரிக்கிறது.

குறிப்பாக ஒத்தக்கடை பகுதியிலுள்ள கொடிக்குளம், திருமோகூர், ராஜகம்பீரம், ஏபிஆர்-சிட்டி, திண்டியூர் போன்ற இடங்களில் அடுத்தடுத்து இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஊரடங்கின்போது, குற்றச் செயல் நடக்காது என, நம்பியவர்களுக்கு மத்தியில் பைக் திருடர்களின் கைவரிசை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் அடுத்தடுத்து நடக்கும் இது போன்ற டூவீலர் திருட்டு அப்பகுதியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இரு சக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக பாதிக்கப்பட்டோர் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், ‘‘ திருமோகூர் உட்பட ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இதுவரை
6-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. திருமோகூர் ஊராட்சி துணைத் தலைவரின் பைக் திருடுபோனது. போலீசில் புகார் கொடுக்கச் சென்றால் கரோனா பாதுகாப்பு பணியே தற்போது முக்கியம். பிறகு பார்க்கலாம் என்கின்றனர். ஊடரங்கு நேரத்தில் அவசரத் தேவைக்கு வெளியில் போக முடியவில்லை. துரித நடவடிக்கைதேவை,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in